Wednesday 28 January 2015

என் கதை - 6: மூன்று பிள்ளைகள்

நான் குடும்ப சகிதம் கொழும்புக்கு வந்து அங்கு வேலைசெய்தேன். சில மாதங்களின் பின் கேகாலைக்கு மாற்றம் எடுத்துக்கொண்டுபோய் மனைவியின் தந்தையார் வீட்டில் தங்கியிருந்து வேலைசெய்து கொண்டிருக்கும்போதுதான் 1962இல் எனது மூத்த மகள் பிறந்தாள். அதன்பின் யாழ்ப்பாணம், சாவகச்சேரிக்கு மாற்றலாகி நான்கு வருடம் வேலை செய்தபோது 1967ம் ஆண்டு இரண்டாவது மகளும் 1971ம் ஆண்டு மூன்றாவது மகளும் பிறந்தார்கள்.

எனக்கு மூன்று குழந்தைகளும் பெண்ணாக பிறந்துவிட்டனவே என்று ஆச்சிக்கு சொல்லொணாக் கவலை. இருந்தும் எனது துணிவும் விடாமுயற்சியும் அவருக்கு நம்பிக்கை கொடுத்தது. “மூன்று பெட்டைகளும் மூன்று இராசாக்களைக் கொண்டுவருவாளைவை” என்று அவர் அடிக்கடி சொல்லுவார். அது அவரின் அனுபவமாக இருக்கும். அதாவது, ஆண் பிள்ளைகளெல்லாம் பிறந்தவீட்டை விட்டு பெண்வீட்டுக்குப் போய்விடுவார்கள் என்பதை அப்படி சொன்னார்.

குறிப்பு: இந்திய வழக்கமான திருமணத்தின்பின் பெண்களை பிறந்தவீட்டிலிருந்து மாமியார் வீட்டுக்கு அனுப்புவதற்கு மாறாக, யாழ்ப்பாணச் சமூகங்களில் கல்யாணமான பின் ஆண் பிள்ளைகள்தான் மாமனார் வீட்டுக்கு அல்லது தனிக்குடித்தனத்துக்கு அனுப்பப்படுவர். எனவே, இங்கு பொதுவாக பெண்பிள்ளைகளே பெற்றோரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், வரதட்சிணை / சீதனம் இந்திய சமூகங்களைப் போலவே, பெண்வீட்டாரால் ஆண்வீட்டுக்கு கொடுக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் உயர்சாதி என அழைக்கப்படும் வேளாளர்களின் குடும்பங்கள் ஏழ்மையில் இருந்தாலும், சொந்தமாக ஏராளமான ஏக்கர் காணிகளை வைத்திருப்பார்கள். அந்நிலங்களில், அவர்கள் குடும்பமாக விவசாயத்தில் ஈடுபட்டால் சொந்தமாகவோ அல்லது அவர்கள் வேறு வேலைகள் செய்துகொண்டிருந்தால் அந்நிலங்களை வேறு குத்தகைக்கு கொடுத்தோ தோட்டம் அல்லது நெற்செய்கையை தொடர்ந்து செய்துவருவார்கள். இந்நிலை இன்றும்கூட தொடர்ந்துவருகின்றது. அவ்வாறான குடும்பங்கள் வெளிநாட்டில் உழைத்தாலும், மருத்துவர், பொறியியலாளர், சட்டத்தரணி போன்ற வேலைகளில் ஈடுபட்டு நன்றாக சம்பாதித்தாலும் குடும்பத்தின் சொத்தின் பெரும்பகுதி காணிகளாகவும், நெல் வயல்களாகவும், அதிலிருந்து வரும் விளைச்சலாகவும்தான் இன்றும் இருந்துவருகின்றது. எனவே, இன்றுகூட வரதட்சிணை / சீதனமாக பணம், நகை, வாகனங்கள் தரப்பட்டாலும் அவற்றைவிட முக்கியமாக காணி நிலங்களே சீதனமாக எதிர்பார்க்கப்படுகின்றன.

சாவகச்சேரியில் வேலைபார்க்கும் போது, வடமராட்சி, வதிரியில் பதினையாயிரம் ரூபாய்க்கு ஒரு தோட்டம் வாங்கி அதில் வேலைநேரம் போக, பகுதி நேரமாக வாழை பயிர் செய்து, நான்கு வருடங்களாக விளைச்சல் எடுத்து வந்தேன். அந்தக்காலத்தில் எனக்கு தோட்டவேலை தவிர நெல்வயல் வேலைகள் எதுவும் தெரியாது. அதற்கு எனது சொந்த ஊரான வடமராட்சியில் (வதிரி) வயல்கள் இல்லாததும் ஒரு காரணம். எனது மனைவியின் ஊரான தென்மராட்சி, மறவன்புலோவில் தோட்டங்கள் இல்லை. ஊர்முழுதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்த நெல் வயல்கள்தான். எனவே, மனைவியின் சீதனக் காணிகள் எல்லாம் வயலும் பனந்தோப்பும் தென்னங்காணியுமாக இருந்தது. அவர்கள் கேகாலையில் இருந்ததால் காணிகளை குத்தகைக்கு விட்டிருந்தனர். நான் சாவகச்சேரிக்கு மாற்றலாகி வந்தவுடன் வயல் காணிகளை குத்தகைக்காரர்களிடமிருந்து மீட்டு கூலிக்கு ஆள் போட்டு செய்கை செய்யத் தொடங்கினேன். உழவு வேலை எல்லாம் உழவு இயந்திரத்தால் செய்துகொண்டு, மற்றவேலைகளை கூலியாட்களை வைத்து செய்துவந்தேன்.

மூத்த மகளுக்கு ஐந்து வயதானவுடன், சாவகச்சேரி பெண்கள் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவந்தார். இரண்டாவது மகளும் அதே பாடசாலையிலேயே படித்து இருவரும் அங்கேயே க.பொ.த சாதாரண தரம் (இந்தியாவில் பத்தாம் வகுப்புக்கு நிகர்) சித்தியடைந்தனர். இவர்களின் படிப்புக்காக சாவகச்சேரியில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பமாக வசித்து வந்தோம். மூன்றாவது மகள் ஒரு வயதாக இருக்கும்போது, எனக்கு பதுளை கந்தோருக்கு மாற்றம் வந்தது. குடும்பத்தை மறவன்புலவில் விட்டுவிட்டு நான் பதுளைக்கு செல்லவேண்டி ஏற்பட்டது. நான், பதுளையில் வேலை செய்துகொண்டும், மறவன்புலத்தில் எனது வயல்களை விதைப்பித்து வந்தேன். அத்துடன் வடமராட்சி வதிரியில் இருந்த தோட்டத்தை குத்தகைக்கு கொடுத்துவிட்டிருந்தேன். பிள்ளைகளின் படிப்புக்காகவும் போக்குவரத்து வசதிக்காகவும் நாவற்குழியின் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கே குடும்பமாக: மனைவி, பிள்ளைகள், மாமா, மாமி [மனைவியின் பெற்றோர்], மைத்துனி [மனைவியின் தங்கை] ஆகியோரை இருக்க வைத்தேன்.


பதுளையில் வேலை செய்யும்போதும், மாதத்தில் ஒரு முறையாவது மறவன்புலவுக்கு வந்துவிடுவேன். வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு பதுளையிலிருந்து கண்டி பஸ் எடுத்து பின்னேரம் ஐந்து மணிக்கு கண்டி வந்து, ஐந்து முப்பதுக்கு யாழ்ப்பாண பஸ் எடுத்தால், அது விடியற்காலை இரண்டு முப்பது மணியளவில் நாவற்குழியை வந்தடையும். வார இறுதியை அங்கே கழித்துவிட்டு, ஞாயிறு பின்னேரம் யாழ்தேவியில் (யாழ்ப்பாணம்-கொழும்பு தடத்தில் பயணிக்கும் புகையிரதம்) ஏறினால் பொல்காவலை ஸ்டேஷனில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி, பதுளை தபால் புகையிரதத்தைப் பிடித்து, மறுநாள் திங்கள் காலை பதுளை கந்தோருக்கு வேலைக்குப் போவேன். பாடசாலை விடுமுறை காலங்களில் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பதுளைக்குக்கு வந்து விடுமுறையைக் கழிப்பார்கள்.

என் கதை - 5: என் கல்யாணம்

மண்டபம் முகாமில் கடமையாற்றிய கணக்குப்பகுதி (Accounting) எழுதுவினைஞர் ஓய்வுபெற்றுச் சென்றதால், அந்த இடத்துக்கு நான் விண்ணப்பம் செய்திருந்தேன். அப்பதவிக்கு தொற்றுநோய் தடுப்புப் பிரிவில் (Quarantine Department) இருந்தும் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். எனக்கு கணக்குப் பகுதியில் அனுபவம் இருந்தபடியால் சுகாதார இலாகாவின் தலைவர் (Director of Health) என்னைத் தெரிவு செய்து 1959ம் ஆண்டு ஜனவரியில் வேலையேற்கும்படி பணித்தார். அதன்படி, 59 ஜனவரியில் மண்டபம் முகாமில்  வேலையில் அமர்ந்தேன். அங்கு எனக்கொரு வீடும் தரப்பட்டிருந்தது.

தொற்றுநோய் அபாயம் காரணமாக, அங்கு வேலை செய்பவர்கள் வெளியில் சாப்பாடு எடுக்கக்கூடாது. எனக்கு சமையல் நன்கு தெரிந்திருந்தாலும், நேரமின்மை காரணமாக நான் ஒரு பையனை வேலைக்கு அமர்த்தி சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அதே காலப்பகுதியில் இரண்டு எழுதுவினைஞர்கள் குடிவரவு-குடியகல்வு இலாகாவுக்கு மாற்றலாகி மண்டபம் முகாமுக்கு வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் சிங்களவர், மற்றவர் யாழ்ப்பாணத்தில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டாமவர், எனது அக்காவின் மகனுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒருசேர பரீட்சையில் சித்தியடைந்தவர். அவர் மாற்றலாகி மந்தம் மண்டபம் வந்தபொழுது தனது தாயாரையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். அவர்களுக்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கு, பையனை வைத்துச் சமையல் செய்து சாப்பிடுவதும், வீட்டைப் பராமரிப்பதும் கட்டுப்படியாகவில்லை. அதனால், நானும் துணைக்காக ஆச்சியை கூட்டிக்கொண்டு வருவதற்கான ஒழுங்குகளைச் செய்து பாஸ்போர்ட்டும் எடுத்துவிட்டேன். ஆனால் அக்காவும் போலிஸ் அண்ணரும் அதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆச்சியை இந்தியா வரவழைக்க முடியாததால், நான் கல்யாணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவெடுத்து, கோப்பாயில் கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த அண்ணருக்கு நிலைமையை விளக்கி கடிதம் எழுதினேன். அவரும் போலிஸ் அண்ணருமாக சேர்ந்து, எமது தூரத்து உறவாக தென்மராட்சி பகுதியில், சாவகச்சேரி அருகில் உள்ள ஊரான மறவன்புலத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பினர். பெண்ணின் தந்தையார் கேகாலை இறப்பர் தோட்டத்தில் கண்காணிப்பாளராக உயர்ந்த பதவியில் இருந்ததால், அவர்கள் மிகவும் வசதியாக அங்கே வாழ்ந்து வந்தனர். பெண் கேகாலையில் இருந்ததால், பெண்பார்க்க வேண்டுமென்றால், கேகாலைக்கு போய்த்தான் பார்க்கவேண்டும் என்று அண்ணர் கடிதம் எழுதியிருந்தார்.


எனவே, குடும்பத்தினரையும் தம்பியையும், பெண் பார்க்க கேகாலைக்கு வரச்சொல்லி, நானும் லீவு எடுத்துக்கொண்டு இந்தியாவிலிருந்து அங்கே வந்து பெண் பார்க்கும் படலத்தை முடித்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தேன். அடுத்த மாதமே கல்யாணத்தையும் செய்துகொண்டு மண்டபம் முகாமுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன். அடுத்து வந்த சில மாதங்களில், எனக்கு மாற்றம் கொடுத்த சுகாதார சேவை அதிபராக இருந்த டாக்டர் ஓய்வுபெற்றார்.அவருடைய இடத்துக்கு தொற்றுநோய் தடுப்புப் பகுதியில் டைரக்டராக இருந்த டாக்டர் வந்தவுடன் என்னோடு மண்டபம் முகாமுக்கு விண்ணப்பித்த இன்னொருவரை என்னுடைய இடத்துக்கு நியமித்துவிட்டார். விளைவாக, ஆறு மாதங்கள் கழித்து, என்னைக் கொழும்புக்கு மாற்றிவிட்டார்கள்.. அந்தக் குறுகிய காலத்துக்குள் நானும் மனைவியும் தமிழ்நாட்டில் மதுரையை மட்டும்தான் பார்க்கக்கூடியதாக இருந்தது.

--------
தொடரும் 

Wednesday 17 December 2014

என் கதை- 4: மண்டபம் முகாம் (இந்தியா)

இந்தியாவின் மண்டபம் முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத் தமிழர்களை தேயிலைத்தோட்டக் கூலிகளாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட இம்முகாம், பின்னர், ஈழப்போர் காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை தடுத்துவைக்கும் முகாமாக பிரபலமடைந்தது. 

இருந்தும், இடைப்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் கடல்வழியாக வரும்/போகும் அனைவரும் தனுஷ்கோடி மண்டபம் முகாமினூடாகத்தான் செல்ல முடியும். பிரயாணிகள் மூலம் கொலரா போன்ற தொற்றுநோய்கள் நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதற்காக, இந்தியாவிலிருந்து பயணிக்கும் பிரயாணிகள் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு, ஏழு நாட்கள் இந்த முகாமில் வைத்து அவதானிக்கப்பட்ட பின்னரே இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


மண்டபம் முகாம் 350 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி வீடுகள், இந்து முஸ்லீம் கிறித்தவ ஆலயங்கள், நீச்சல் குளங்கள், பாடசாலை, திறந்தவெளி அரங்கம் என சகல வசதிகளுடனும் இயங்கி வந்தது. இந்த முகாமுக்குள் எவரும் இலகுவில் உள்ளே செல்ல முடியாது.. அதற்கான காவல்காரர்கள் இரவுபகலாக கடமையில் இருப்பர். முகாமை கூட்டித் துப்பரவு செய்வதற்கென்றே முப்பதிற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இருந்தனர். மேலும் கட்டங்களையும் வீடுகளையும் வீதிகளையும் பராமர்ப்பதற்கு PWT (Public Work Department) இன் ஓவர்சீயரும் (Overseer) வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். பொதுவாகக் கூறினால், மண்டபம் முகாம் அக்காலத்தில், இந்தியாவில் ஒரு சிறு, தனி அரசாங்கம் போலவே செயற்பட்டு வந்தது.

இங்கே, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் மண்டபம் முகாமில் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கப்பட்டு, அவர்கள் தொற்றுநோய் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களா என பரிசோதிக்கப்படுவார்கள். இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றவர்கள் தனுஷ்கோடி துறைமுகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் மண்டபத்தில் தடுக்கப்பட்டு, தடுப்பூசி ஏற்றப்பட்டு, குடிவரவு அனுமதி இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏழு நாட்கள் முடிவில் இலங்கைக்குப் போக அனுமதிக்கப்படுவார்கள்.

பிரயாணிகள் தங்கும் விடுதிகளும் அங்கே இருந்தன. இவ்விதமாக தங்குபவர்களுக்கு உணவு வசதிகள் அளிப்பதற்கு, ஒரு ஸ்தாபனம் ஒப்பந்தம் பெற்று அவர்களுக்கு சகல உணவுகளும் வழங்கி வந்தது. இம்முகாமில் வேலை செய்யும் இலங்கை ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் 155 இந்திய ரூபாய் சம்பளத்துடன் இந்திய அரசாங்கத்தால் 50 இந்திய ரூபாய் உபரியாக (போனஸ்) வழங்கப்படும். (ஒரு இந்திய ரூபாய் இரண்டு அல்லது மூன்று இலங்கை ரூபாய்க்கு சமனானது). இப்படியான அதிக சம்பளத்தின் காரணமாக, மண்டபம் முகாமிற்கு வேலைமாற்றம் பெற்று வேலை செய்வதற்கு ஊழியர்களிடையே கடும் போட்டியும் நிலவியது.


இந்த முகாமில் உள்ளவர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்கான பணம் இலங்கைத் திறைசேரியிலிருந்து இராமநாதபுரம் வங்கியில் வைப்பிலிடப்படும். அப்பணத்திலிருந்து இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். இவ்விதமாக இலங்கை திறைசேரியிலிருந்து வரும் பணத்தின் வரவு செலவுகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கையிலிருந்து எழுதுவினைஞர் ஒருவர் அமர்த்தப்படுவார். இலங்கை பொது எழுதுவினைஞர் சேவையிலுள்ள ஒருவர் இதனைப் பொறுப்பேற்று, ஒவ்வொரு மாதமும் ஏற்படும் வரவு செலவுக் கணக்குகளை அட்டவணைப்படுத்தி இலங்கை திறைசேரிக்கு அனுப்புவார். 

--
தொடரும்

Monday 24 November 2014

என் கதை - 3: அக்காவின் கல்யாணம்

1954ம் ஆண்டு. நான் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது, அக்காவுக்கு கல்யாணம் செய்வதைப் பற்றி ஆச்சி ஒரு கடிதம் எழுதியிருந்தார். ‘அக்காவுக்கு கலியாணம் செய்யவேண்டும், வயசும் ஏறிக்கொண்டு போகுது’ என்று சொல்லி, அக்காவுக்குஅவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், ஒரு இரண்டாம்தார மாப்பிள்ளை பொருந்தி வருவதாகவும், அக்காவின் ஜாதகப்படி, இரண்டாம் தாரம்தான் அமையுமென்று ஜோதிடர் சொல்வதாகவும் எழுதியிருந்தார். நான் விசாரித்ததில், அவர் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் என்றும் அவருக்கு ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரு குழந்தைகள் உண்டென்றும் அறிந்தேன். மேலும், சீதனம் அதிகம் கேட்கமாட்டார்கள் என்பதால், நானும் எனது சம்மதத்தை தெரிவித்தேன். அந்த வருடமே அக்காவின் விவாகம் நடந்து முடிந்தது. சீதனமாக, ஆச்சியின் சேமிப்பிலிருந்த சில நகைகளும், எனது கடைசி அண்ணரின் பங்காக ரூபாய் ஐயாயிரம் காசும் கொடுத்தனர். நானும் தம்பியும் சேர்ந்து, எங்களது பங்காக, ஐயாயிரம் ரூபாய் செலவில், நாங்கள் குடியிருந்த காணியில் இரண்டு அறைகளுடனான ஒரு கல்வீடு கட்டித் தருவதென்றும் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட செலவை அக்காவும் அத்தானும் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் முடிவு செய்து அவரின் திருமணத்தையும் முடித்து வைத்தோம்.

அக்கா, அத்தான் படிப்பித்த கம்பளையில் உள்ள பாடசலைக்குப் போய் சிலகாலம் இருந்துவிட்டு ஊருக்குவந்து ஆச்சியுடன் இருந்தார். நான்  வவுனியாவில் உள்ள சௌக்கிய சேவை அதிபர் காரியாலயத்தில் வேலை செய்தபோது, நான் ஒத்துக்கொண்டபடி வீடு கட்டி, கூரை போட்டு ஓட்டால் வேய்ந்து முடிய, ரூபாய் ஐயாயிரம் முடிவடைந்ததால், மேற்கொண்டு வேலைகளை அத்தானிடம் ஒப்படைத்தோம். இருந்தும் அவ்வீடு அவர்களால் கட்டி முடிக்கப்படவில்லை.


1959ம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு வவுனியாவிலிருந்து கொழும்புக்கு மாற்றம் வந்தது. கொழும்பில் நான் முன்பிருந்த வெள்ளவத்தை வீட்டிலேயே ஒன்றுவிட்ட அண்ணரின் மகனின் அறையிலேயே தங்கிருந்தேன். அப்போது, எனது இலாகாவின் கிளை இலாகாவான தொற்றுநோய் தடுப்பு இலாகாவின் (Quarantine Department) ஒரு பகுதி இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி மண்டபத்தில் இயங்கி வந்தது. அந்தத் தொற்றுநோய் தடுப்பு இலாகாவுடன் இலங்கை குடிவரவு குடியகல்வு (Immigration & Emigration) இலாகாவும் இயங்கி வந்தது. குடிவரவு/குடியகல்வு இலாகாவில் இலங்கை வருவோர்க்கு விசா வழங்கும் வேலை மட்டுமே நடைபெற்று வந்தாலும் தொற்றுநோய் தடுப்பு பகுதியில் ஒரு இலாகாவுக்கான சகல வேலைகளும் –டாக்டர், நேர்ஸ், ஆண் பெண் தாதிமார், அதற்குத் தலைவராக இலங்கையிலிருந்து ஒரு டாக்டர், மற்றும் ரியாலய வேலைகளை மேற்பார்வை செய்யும் உதவியாளர், எழுதுவினைஞர்கள் என மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தது.

தொடரும்... 
(அடுத்து - இந்தியா: மண்டபம் முகாம்)

Monday 13 October 2014

என் கதை - 2: இருவர்

நாங்கள் இருவரும் பரீட்சையில் சித்தியடைந்ததையிட்டு எங்கள் குடும்பம் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தது. இருந்தும் குடும்பத்தில் வறுமையே தாண்டவமாடியது. எனவே எங்கள் குலத்தொழிலான கமத்தொழிலில் (விவசாயம்) ஈடுபட்டோம். படிக்கும்போது பகுதிநேர தொழிலாக செய்துவந்த தோட்டவேலையில் முழுநேரமாக ஈடுபட்டோம். அப்பொழுது ஏற்கனவே SSC சித்தியடைந்த அண்ணன் கூட்டுறவுப் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். வைரவக் கடவுள் கிருபையால் அவருக்கு மட்டக்களப்பு மூதூர் பகுதியில் வேலை கிடைத்தது. அவர் வெளியூர் போனதன் பின் எங்கள் குடும்பப் பொறுப்பு எங்கள் தாயார் தலையில் ஏறியது. அவருக்கு உறுதுணையாக நாங்களும் இருந்துவந்தோம்.

இப்படி இருந்துவரும் பொழுது 1952 இல், இலங்கை அரச வர்த்தமானியில் புகையிரதப் பதிவினரால் Underguard வேலைக்கு (புகையிரதம் புறப்படுவதற்காக கொடி காட்டுதல், புகையிரதப் பெட்டிகளை இணைத்து, பிரித்து விடுதல் போன்ற பணிகள் அடங்கிய வேலை) விளம்பரம் வந்தது. அதற்கு விண்ணப்பம் அனுப்பினேன். கொழும்பில் மருதானையில் பரீட்சை என்று கடிதம் வந்தது. அன்றுவரை புகைவண்டியையே காணாமல் இருந்த எனக்கு, கொழும்புக்குப் புகைவண்டியில் போவதென்றால் பயமாக இருந்தது. மேலும் ஆச்சிக்கும் அக்காவுக்கும் இந்த வேலையில் அறவே விருப்பம் இல்லை. ரயில் பெட்டிகளை சேர்க்கும் போது பெட்டிகளுக்கு இடையே நசுங்கி விடுவாய் என்று பயந்துகொண்டிருந்தார்கள்.

பின்னர் எழுதுவினைஞர் வேலைக்கு விளம்பரம் வந்தபோது 18-21 வயது நிரம்பிய SSC சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றனர். அதற்கு நாங்கள் இருவரும் விண்ணப்பித்து பரீட்சை எழுதினோம். பரீட்சையில் இருவரும் சித்தியடைந்து, 1953 ஜனவரி 2ம் தேதி இருவருக்கும் ஒருசேர நியமனம் கிடைத்து. எனக்குக் கொழும்பில் சுகாதாரப்பகுதியிலும் தம்பிக்கு கொழும்பு பகுப்பாய்வாளர் பகுதியிலும் வேலை கிடைத்தது. கொழும்புக்கு போவதற்கு புகையிரதப் பயணச்சீட்டும் அந்தந்த இலாகாவினால் வழங்கப்பட்டிருந்தது.

வீட்டில் ஒருபுறம் மட்டற்ற மகிழ்ச்சியும் மறுபுறம் இருவரும் ஒரே நேரத்தில் வீட்டைவிட்டுப் போவது சொல்லொணாச சோகமாகவும் இருந்தது. மேலும், நாங்கள் வளர்த்த ஆடு மாடு யாவற்றையும் விற்கவேண்டி ஏற்பட்டது. இனி வீட்டில் ஆண்துணை இல்லை. எனவே, எனது அக்காவின் மகனை (எட்டாம் வகுப்பு) வீட்டில் ஆச்சி, அக்கா ஆகியோருடன் தங்கும்படி ஒழுங்கு செய்துவிட்டு கொழும்புக்குச் சென்றோம். நாங்கள் கொழும்புக்கு வருகின்றோம் என்பதை கொழும்பு கிராண்ட்பாஸ் போலிஸ் ஸ்டேஷனில் சார்ஜன்ட் ஆக வேலை பார்த்த ஒன்றுவிட்ட அண்ணருக்கு அறிவித்துவிட்டு போனோம். அவர் எமது ஆச்சியின் சகோதரி (குஞ்சி) மகன். (போலிஸ் அண்ணா என்று எங்களால் அழைக்கப்பட்டவர்). அவர் எமக்காக மருதானையில் (ஹல்ஸ்ட்ரப்ஃ - Hultsdoruf, Colombo 12) Travelers Home இல் ஓர் அறை ஒழுங்குபடுத்தி இரண்டு கட்டில், மெத்தை மற்றும் எமக்குத் தேவையான சகல பொருட்களும் இரண்டு இரண்டாக வாங்கி வைத்திருந்தார். 

நாங்கள் ரயிலில் வருவது தெரிந்ததும், போலிஸ் அண்ணர், “எக்காரணம் கொண்டும் ரயிலிலிருந்து இறங்கக் கூடாது. ரயில் கடைசி ஸ்டேஷனில் நிற்கும். எஞ்சினை கழற்றி மாட்டும்போதுகூட பெட்டியிலேயே இருந்துகொள்ள வேண்டும், என்று கட்டளையிட்டார். ரயில் நின்றபோது, ரயிலிலிருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினர். நாங்களோ பெட்டியில் அசையாமல் கடைசிவரை உட்கார்ந்திருதோம். எல்லோரும் போன பின்பு போலிஸ் அண்ணர், பெட்டி பெட்டியாக பார்த்துக்கொண்டு வந்து எங்களைத் தொலைந்துவிடாமல் கண்டுபிடித்துவிட்டார்.

நாங்கள் கொழும்பை அடைந்ததும் எம்மை கூட்டிக்கொண்டு போய் மேற்கூறிய விடுதியில் விட்டுவிட்டு முகாமையாளரிடமும் எங்களை அறிமுகப்படுத்திவிட்டு சென்றார். போலிஸ் அண்ணர் அடிக்கடி ரவுண்ட்ஸ் போகும்போது இரவில் போர்டிங்குக்கும் வருவது எமக்கு மிகுந்த மரியாதையாக இருந்தது.

நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததால் தனிமை எங்களை வருத்தவில்லை. ஆனால் அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து மனதைச் சஞ்சலப்படுத்திய வண்ணம் இருக்கும். இப்படியாக ஒரு மாதம் முடிந்து அந்த மாதச் சம்பளமாக ஆளுக்கு 155 ரூபாய் கிடைத்தது. போர்டிங் காசு ரூபாய் 60 போக மிகுதி 95 ரூபாவை கைச்செலவுக்கென வைத்திருந்தோம்.
  
அன்றைக்கு ரவுண்ட்ஸ் வந்த போலிஸ் அண்ணர், “சம்பளம் வந்துவிட்டதா? என்று கேட்டார். நாங்களும் “ஆம். போர்டிங் காசு 120 கொடுத்தோம். மீதி இருக்கு என்று பதிலளித்தோம். உடனே அவர், வீட்டுக்கு காசு அனுப்பியாயிற்றா? என்று கேட்டார். நாங்கள் இன்னும் அனுப்பவில்லை என்றோம்.  அதற்கு அவர் என்ன கஷ்டமாக இருந்தாலும் முதல் வேலையாக வீட்டுக்கு உங்களால் அனுப்பக்கூடியளவு பணத்தை உடனடியாக அனுப்பவேண்டும். இது உங்களுடைய கடமை.என்று கண்டிப்புடன் கூறினார். அக்கடமையை ஆச்சி உயிருடன் இருக்கும்வரை நாம் செய்துவந்தோம். இன்று அண்ணரும் இல்லை, ஆச்சியும் இல்லை.


இப்படியே இரண்டு வருடங்கள் கொழும்பில் இருக்கும்போது தம்பிக்கு நுவரெலியாவிற்கு மாற்றம் வந்தது. அப்போது என் சீனியப்புவின் (பெரியப்பா) மகன் நவரத்தினம் வெள்ளவத்தையில் ஒரு வீட்டில் தனியறையில் இருந்தார். தம்பி நுவரெலியா போன பின்பு நான் போர்டிங்கில் தனியாக இருப்பதை அறிந்து தன்னுடன் வந்து இருக்கும்படி கூறி வெள்ளவத்தைக்கு கூட்டிக்கொண்டு போனார்

------
தொடரும்

Monday 6 October 2014

சொல்வனம் இதழில்: துலா

சுருக்கம்


யாழ்ப்பாணத்தில் நீர்த்தேவைகள் மழையினாலும், கிணறுகளினாலும் மட்டுமே பூர்த்திசெய்யப்படுவதை பலரும் அறிந்திருக்கக்கூடும். இன்றைக்கும் அரசாங்கம் குடிநீரை குழாய்மூலம் விநியோகிக்க தேவையிராமல், புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கிணறும் சேர்த்தே கட்டப்படுகின்றது. இந்நிலையில், கடந்த நூற்றாண்டில் பெரும் தோட்டங்களுக்கு பாரிய அளவில், மனித வலுவை மட்டுமே கொண்டு கிணறுகளிலிருந்து  நீர் இறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பொறியே துலா ஆகும். ஒவ்வொரு இழுவையிலும் 130 கிலோ (இரண்டு ஆள் எடை) நீரை இழுக்கும் சக்தி வாய்ந்த துலாவில், ஆட்கள் ஏறி நின்று, தமது எடையை பயன்படுத்தி நீர் இறைப்பார்கள். சில வேளைகளில் அப்படி நீர் இறைக்கும்போது, ஆட்கள் தூக்கி எறியப்பட்டு படுகாயமடையும் அபாயங்களும் உண்டு. தாத்தாவின் அண்ணரும் அப்புவும் அவ்வாறு எறியப்பட்டிருக்கிறார்களாம். இது முற்றுமுழுதாக பனைமரத்தின் பாகங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டதாகும்

இத்தகைய பொறியான துலாவைப்பற்றி தாத்தா எழுதிய கட்டுரை பரிசீலிக்கப்பட்டு, 114வது சொல்வனம் இதழில் வெளியாகியிருக்கின்றது.


கட்டுரை

பழந்தமிழர் வேளாண்மைத் தொழில் நுட்பம்


துலா – பயன்பாடும் வடிவமைப்பும்

அந்தக்காலத்தில், (1930 களில்) யாழ்ப்பாணத்தின் தோட்டங்களின் தண்ணீர்த் தேவைகளை நிவர்த்தி செய்ய துலாக்கள் இன்றியமையாததாக இருந்தன. மின்சாரப் பாவனையும், பெட்ரோல் டீசல் பாவனையும் மிக அரிதான அந்தக் காலக்கட்டத்தில் நீர் இறைக்கும் இயந்திரங்களோ, நவீன சாதனங்களோ இருக்கவில்லை. பணம் படைத்தவர்கள் கூட்டாகச் சேர்ந்து அமைத்து தமக்கு தேவையான காலத்தில் தமது தோட்டங்களுக்கு பயன்படுத்திய, மாடுகளைக் கட்டி இழுக்கும் சொரிவாளி சூத்திரங்களும் சங்கிலி பூட்டி மாடு இழுக்கின்ற இரட்டை வாளி சூத்திரங்களும்கூட மிக அரிதாகத்தான் காணப்பட்டன.
அப்போது பெரும்பாலான தோட்டங்களில் கிணறுகளும் அவற்றில் நீர் இறைக்க ஒவ்வொரு கிணற்றுக்கும் தலா ஒவ்வொரு துலாவும் இருக்கும். துலாவின் எல்லாப் பாகங்களும் பனைமரத்தின் பகுதிகளைப் பயன்படுத்தியே செய்யப்பட்டிருக்கும். இதன் இயக்கம் ரயில்வே கடவைகளில் பயன்படுத்தப்படும் தடுப்பை அல்லது ஒரு சீசா (see saw)வை ஒத்திருக்கும்.
Pulley_Wheel_Village_Farming_Ancient_Axis_Water_Agriculture_Pumps_Manual

துலாவால் நீர் இறைத்தல்

துலாவைப் பயன்படுத்தி பெரிய தோட்டங்களுக்கு நீர் இறைக்க முடியும். ஒவ்வொரு இழுவையிலும் 35 கலன் (130 லிட்டர்) நீரை துலாவால் இழுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், அவ்வளவு எடையுள்ள நீரை, கைகளால் இழுக்க முடியாது என்பதால், துலாவில் மனிதர்கள் ஏறி, தமது எடையைப் பயன்படுத்தி நீர் இறைப்பார்கள். கிணற்றின் அளவைப் பொறுத்து இரண்டு பேர் அல்லது நான்கு பேர் துலாவில் ஏறவேண்டியிருக்கும்.
ஆரம்பத்தில், படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு துலா நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும்போது அதன் பின்புறம் நிலத்தில் தொட்டுக்கொண்டிருக்கும். துலாவின்மேல் ஏணிப்படிகள் போன்ற அமைப்புகளில் மனிதர்கள் ஏறி இறங்க முடியும். சிறு கிணறு ஒன்றுக்கு, முதலில் இரண்டு பேர் துலாவில் ஏறுவார்கள். சமநிலை தவறி விழுந்துவிடாமல் இருப்பதற்கு, ஆடுகால் மரங்களில் கட்டப்படிருக்கும் ஓடுகயிற்றை லேசாகப் பிடித்துக்கொள்வார்கள். ஒருவர் அடிப்பாகத்தில், நிலத்துக்கு அருகிலும், மற்றவர் முன்பாகத்தில் அச்சுலக்கைக்கு மேலும் நிற்பார்கள். இப்போதும் துலா நிமிந்து நிற்கும். துலாவைப் கீழே பதித்து நீர் அள்ளச் செய்வதற்கு அச்சுக்கு மேல் நிற்பவர் துலாவின் நுனியை நோக்கி ஏற ஆரம்பிக்கும் அதேநேரம், துலாவின் பின்புறம் இருப்பவரும் அச்சை நோக்கி ஏறுவார். இதனால் துலா பதிந்து, பீலிப்பட்டை கிணற்றினுள் நீரைத் தொட்ட உடனேயே அது சரிந்து நீரை அள்ளத் துவங்கும்.
இப்போது துலா நுனியில் நிற்பவர் நீர் அள்ளப்படுவதைக் கவனிப்பார். நீர் கோலி முடிந்ததும், அவர் துலாவின் அச்சை நோக்கி பின்னோக்கி நகர்வார். அதேநேரம் துலாவின் அச்சுக்குக் கீழ் நிற்பவரும் துலாவின் பின்புறமாக நகர்வார். இப்போது, துலா மேலே நிமிரத் துவங்கும். பீலிப்பட்டை நீருடன் மேலே வந்ததும், கிணற்று வாயிலில் (மிதியில்) நிற்பவர் பீலிப்பட்டையை சரித்து மிதியில் இருக்கும் பீலியில் நீரை ஊற்றுவார். அந்நீர் பீலி வழியாக வாய்க்கால் ஊடாக தோட்டத்துக்கு ஓட, தோட்டத்தில் நிற்பவர் அந்நீரை திருப்பிவிட்டு பயிர்களுக்கு பாய்ச்சுவார்.
பீலிப்பட்டையிலிருந்து நீர் வெளியேறிய உடனே துலா கொஞ்சம் கீழ்நோக்கி பதிய ஆரம்பிக்கும். அப்போது, துலாவை இன்னும் பதிய வைப்பதற்காக, துலாவில் நிற்கும் இருவரும் மறுபடியும் முன்னோக்கி ஏறுவார்கள். இப்படியாக முன்னும் பின்னும் நடந்து நடந்து துலாவால் நீர் இறைப்பார்கள். தொடர்ந்து நீர் இறைப்பதால், வாய்க்காலில் நீர் தடையில்லாமல் தொடர்ந்து பாய்ந்துகொண்டிருக்கும்.
அன்றாடத் தேவைகளுக்காக நீர் அள்ளப்படும் கிணறுகளில், மேற்படி துலாவில் துலாக்கயிறு இல்லாமல் சாதாரண கயிற்றில் சாதாரண வாளி பொருத்தப்படிருக்கும். பெண்களும்கூட கயிற்றை இழுத்து துலாவை பதியவைத்து நீர் கோலி, அள்ள முடியுமாறு சமநிலையில் துலா வைக்கப்படிருக்கும். அவ்வாறு சமநிலையில் இல்லையென்றால், தேவையான பக்கத்தில் பாரமான கற்கள் கட்டப்பட்டு சமநிலை பேணப்படும்.
இத்தகைய பயனுள்ள துலாவினால் ஆபத்துக்களும் இல்லாமலில்லை. எனக்கு 13 வயதாக இருக்கும்போது (1941 இல்), நாங்கள் குத்தகைக்கு எடுத்த தோட்டமொன்றில், ஒருநாள் நானும் இரண்டு அண்ணர்களும் துலாவால் நீர் இறைத்துக்கொண்டிருந்தோம். நான் துலாவின் நுனிப்பகுதியிலும் எனது இரண்டாவது அண்ணர் (பண்டிதர் என்று அழைக்கப்பட்டவர்) துலாவின் பின்பகுதியிலும் ஏறி நடந்துகொண்டிருக்க மூன்றாவது அண்ணர் கீழே, கிணற்று மிதியில் நின்றுகொண்டிருந்தார். வழக்கம்போல நீர் கோலிவிட்டு துலா நிமிர்ந்துகொண்டிருக்கும்போது திடீரென்று பீலிப்பட்டைக் கயிறு அறுந்துவிட்டது. பெருத்த ஓசையோடு பீலிபட்டை கிணற்றுக்குள் விழ, துலா முழுவிசையோடு சட்டென்று நிமிர்ந்தது. பலமுறை துலாவில் நீர் இறைத்துப் பழக்கப்பட்டதால், துலாவில் நின்ற நாங்கள் இருவரும் ஓடுகயிற்றை இறுக்கமாகப் பிடித்திருக்கவில்லை. எனவே, துலா நிமிர்ந்த வேகத்தில், கண்ணிமைக்கும் நேரத்தில் நான் சமநிலை தவறி வாய்க்காலில் விழ, இரண்டாவது அண்ணர் துலாவிலிருந்து தூக்கி வீசப்பட்டார். உயரம குறைவாக இருந்ததால், இருவரும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பிவிட்டோம். ஆனால் எங்கள் அப்பு (அப்பா) ஒருமுறை இவ்வாறு பெரிய துலாவொன்றிலிருந்து வீசப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறாராம்.
Thula_Antique_Well_Wheel_Pulley

துலா ஒன்றைத் தயார்செய்தல்

துலா ஒன்றைச் செய்வதற்கு, முதலில் 20 – 25 முழம் நீளமுள்ள வைரமான பனையைத் தேர்ந்தெடுப்பார்கள். அதனை சரிசமமான இரு பாதிகளாக நீளவாக்கில் பிளந்து அதன் வெளித்தோலை (பட்டையை) அழுத்தமாகச் சீவியெடுப்பார்கள். அந்த இரு பாதி பனைமரத்துண்டுகளிலும் நிறையத் துளைகளை வரிசையாக இட்டு, அவை இரண்டையும் ஒருசேர வைத்துப் பொருத்தி, சீவிய சிறு பனைமரத் துண்டுகளை அத்துளைகளூடாக செலுத்தி சேர்த்துவிடுவார்கள். துலாவில் ஏறுவதற்கு ஒரு ஏணிபோல இந்தத் துண்டுகள் பயன்படுத்தப்படும்.
பின்பு, துலாவின் அச்சுலக்கையைச் (Axis) செய்வதற்கு பனை மரத்திலான இன்னொரு கட்டையை எடுத்துக்கொள்வார்கள். அதைக் கிடையாக வைத்து, அதன் உருளையான சுற்றுப்புறத்தில் மேல் அரைவாசியை தட்டையாகவும் கீழ் அரைவாசி சுற்றுப்புறத்தை சீரான வளைவாகவும் (ஆடுகால் கட்டைகளில் உருள்வதற்கு வசதியாக) செதுக்குவார்கள். பிறகு மேற்கூறிய முழுப்பனைமர அமைப்பினை எடுத்துக்கொண்டு நடுவில் பனைமரத்தின் பாரமான அடிப்பாகம் பின்புறமாகவும், பாரம் குறைந்த நுனிப்பாகம் முன்புறமாகவும் இருக்கும்படி வைத்து, சமநிலைப்புள்ளியைக் கண்டறிந்து, ஒரு பெரிய துளையிட்டு அதில் அச்சை இறுக்கமாகச் செருகிவிடுவார்கள். இப்போது துலா தயார். இனி இதனை ஆடுகாலில் பொருத்தவேண்டும்
ஆடுகால் என்பது, கிணற்றிற்கு அருகில் துலாவைத் தாங்கி நிற்பதற்காக மரங்களால் அமைக்கப்படுவதாகும். நான்கு மரங்களை 10 அடி சதுரத்தில் கிணற்றுக்கு அருகில் நடுவார்கள். இரண்டு வைரமான கட்டைகளை மரங்களில் வைத்து அம்மரங்களை இரண்டிரண்டாக இணைத்து கீழே படத்தில் காட்டியதுபோல் கட்டிவிடுவார்கள். பிறகு துலாவைத் தூக்கி அச்சுலக்கை ஆடுகாலின் கட்டைகளில் பொருந்துமாறு வைக்கவேண்டும். இதற்கு, முதலில், துலாவை ஆடுகால் கட்டைகளுக்கு இடையில் நிலத்தில் வைப்பார்கள். பிறகுஆடுகாலின் கட்டையொன்றில் கயிறு கட்டி, துலாவிற்குக் கீழாக கயிற்றை செலுத்தி, மறுபக்கம் அடுத்த ஆடுகாலுக்கு மேலே கயிற்றை எடுத்து இழுப்பார்கள். அதேநேரத்தில் ஒருவர் தரையில் கிடக்கும் துலாவின் பின்புறத்தை நெம்பி எழுப்புவார். விளைவாக துலா உயர்ந்து ஆடுகால் கட்டைகளுக்கு மேலே வரும்போது, அச்சு துளையில் அச்சை நுழைத்து இறுக்க அடிப்பார்கள். அச்சு நன்கு இறுகியதும், கயிற்றை எடுத்துவிடுவார்கள். துலா ஆடுகாலில் தங்கி நுனிப்பக்கம் நிமிர்ந்து நிற்கும்.
rope_pulley_Vintage_Design_Engineering_Well_Farming_Water_Land_Ground
துலாக்கயிறு என்பது பனம் ஈர்க்கினால் பின்னப்பட்ட தடித்த கயிறாகும். பனங்குருத்தில் இருந்து ஓலை பிரித்தெடுக்கும்போது ஈர்க்குகளையும் பிரித்து வெயிலில் உலர்த்துவார்கள். பின்பு அவற்றை 15-20 ஈர்க்குகள் கொண்ட புரிகளாக பிரித்து, பெண்கள் ஜடை பின்னுவதுபோல் மூன்று புரிகள் வைத்துக் கயிறாக பின்னுவார்கள். இக்கயிறு ஒவ்வொரு இழுவையிலும் 130 கிலோ நீரை தூக்கும் அளவிற்கு பலமுள்ளதாகவும் பலவருடங்களுக்கு அறுந்து போகாதபடியும் இருக்கும்
இப்போது துலாவின் நுனியில் பனம் ஈர்க்கினால் திரித்த துலாக்கயிற்றை நிமிர்ந்து நிற்கும் நுனித்துலாவில் கட்டி, கீழே இழுத்தால், துலா முன்பக்கம் பதிந்து கிணற்று வாயிலுக்கு (மிதிக்கு – நின்று தண்ணீர் அள்ளும் இடத்துக்கு-) வரும். இப்போது ஈர்க்குக் கயிற்றின் மறுமுனையில் வாளி/கடகம் போன்ற பெரிய பீலிப்பட்டையைக் கட்டுவார்கள்.
பீலிப்பட்டை என்பது 35 கலன் (130 லிட்டர் அல்லது 13 வாளி) நீரைக் கொள்ளக்கூடியதாக பனை ஓலையால் பெட்டி இழைப்பதுபோல் இழைத்துச செய்யப்படுவது. அடிப்பாகத்தில் ஒரு மூலையும் மூன்று பக்கங்களில் மூன்று மூலைகளும் வரும்படியாக பனை ஓலையால் இழைத்து, மேல் விளிம்புக்கு பனை மட்டையைச சீவி வளைத்துச சுற்றிக் கட்டி பலப்படுத்துவார்கள். பின்பு, பீலிப்பட்டை கிணற்றின் உட்சுவர்களில் உரசும்போது, மூலைகளைப் பாதுகாப்பதற்காக, பனைமட்டையிலிருந்து உரிந்து எடுத்த நாரினால் நான்கு மூலைகளுக்கும் பொத்துவார்கள். இந்தப் பீலிப்பட்டையில் பட்டைக்கல் பொருத்தப்படும்.
  
பீலிப்பட்டையின் புகைப்படங்கள்
பட்டைக்கல் – ஒரு வைரமான கல்லை வட்டவடிவமாக 3-4 அங்குலத் தடிப்பில் வெட்டி எடுத்து அதன் நடுவில் துளையிட்டு, உருண்டையான மரக்கம்பு ஒன்றை கல்லின் துவாரத்தில் இறுக்கி பீலிப்பட்டையின் மட்டையுடன் இணைத்துக் கட்டுவார்கள். பட்டைக்கல் என்பது பீலிப்பட்டை தண்ணீர் கொண்டுவரும்போது சுருங்காமல் இருக்கவும், கிணற்றுக்குள் தண்ணீரில் தாமதமில்லாமல் சரிந்து தண்ணீர் கோலவும் உதவுகின்றது. இனி, துலாக்கயிற்றின் முனையில் முடிச்சுப் போட்டு பீலிப்பட்டை அமைப்பை அதில் பிள்ளைக் கயிற்றால் இணைப்பார்கள்.
பிள்ளைக் கயிறு என்பதும் பனை ஈர்க்குகளால் ஆனது. ஆனால், துலாக்கயிறு போல தடிப்பாக இல்லாமல் ஓடுகயிறு போல நீளமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி பீலிப்பட்டையையும் பட்டைக்கல்லையும் சுற்றிக்கட்டி மேலே கொண்டுவந்து துலாக்கயிற்றில் போட்டிருக்கும் முடிச்சில் கட்டிவிடுவார்கள்.
ஓடுகயிறு என்பது பனை ஈர்க்கினால், துலாக்கயிறைவிட மெலிதாக, ஒரு கைப்பிடிக்குள் அடங்குமாறு செய்யப்படுவது. துலா மேல் நடப்பவர்கள் பிடித்துக்கொள்வதற்காக இது ஆடுகாலில் கட்டப்பட்டிருக்கும்.
இப்படியாக ஒரு துலாவை முழுமையாக உருவாக்கி நிலைப்படுத்துதல் என்பது ஒரு கலை. தச்சர்களும் தச்சு வேலை தெரிந்த மற்றவர்களும்தான் இவ்வேலைகளை செய்ய முடிந்தது. துலாவின் உருவாக்கத்தில்கூட யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதிகளின் அடையாளமான, கற்பகத் தருவான பனைமரத்தின் பகுதிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை இவ்வகையான துலாவின் வடிவமைப்பானது சென்ற நூற்றாண்டு யாழ்ப்பாணப் பாரம்பரியத்தின் எச்சங்களில் ஒன்று என்பதை சுட்டிநிற்கின்றது.
-----------
இராஜரட்ணம் ஆறுமுகம் 

**********************
இக்கட்டுரைக்கு, துலாவின் உண்மையான புகைப்படங்கள் என்னிடம் சொந்தமாக இல்லை. இணையத்தில் கிடைத்த சில படங்களை சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு சுட்டியுடன் அனுப்பியிருந்தேன். சில காரணங்களால் அவர்கள் அவற்றை பிரசுரிக்கவில்லை. அந்தப் படங்களோடு சேர்ந்த முழுப்பதிவை, இங்கே தந்திருக்கிறேன். 

சொல்வனம் கட்டுரையின் சுட்டி

(கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிய கருத்துக்களை மட்டும் சொல்வனம் தளத்தில் சென்று இடலாம். மற்ற கருத்துக்களை இங்கேயே, கீழே இடவும்)







Monday 29 September 2014

என் கதை - 1: வீடும் பள்ளியும் (1929-1952) - UPDATED

எங்கள் குடும்பம் கமக்காரர் (விவசாயி) குடும்பம். அப்பு (அப்பா), ஆச்சி (அம்மா), நான்கு அக்காமார், மூன்று அண்ணன்மார், நான் மற்றும் ஒரு தம்பி என மொத்தம் பதினோரு அங்கத்தவர்கள். எங்களுக்கு இனசனம் (உறவினர்) அதிகம் இருந்தாலும் அவர்களுக்கு ஏனோ எங்களைப் பிடிப்பதில்லை. அப்புவும் ஆச்சியும் கல்வி கற்றதில்லை. அப்புவுக்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தெரியும். ஆச்சிக்கு அதுவும் தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் நான் ஆச்சிக்கும் மூத்த அக்காவுக்கும் கையெழுத்து போட பழக்கினேன்.

நாங்கள் கமக்காரர்களாக இருந்தாலும் ஊரில் பிற கமக்காரர்களைப் போல ஓகோ என்று இல்லை. (யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பில் விவசாயிகளே அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பிறரைவிட உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்) காரணம், எங்கள் மூத்த அண்ணன்களின் படிப்புச் செலவுக்கென்று ஆச்சியின் சீதனத் (வரதட்சிணை) தோட்டக் காணிகளை அப்பு விற்று அண்ணனை ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக்கிவிட்டார். இது நடந்தது 1917-1918 ஆண்டுகளில். பயிற்சி முடிந்ததும் அண்ணர் வெளியூரில் தொழில் செய்யப் புறப்பட்டுவிட்டார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் அவருக்கு இராசமரியாதைதான். அந்தக்காலத்தில் ஊரில் யாரும் அரசாங்கத்தில் தொழில் செய்யவில்லை என்பதே காரணம். “கோழி மேய்ச்சாலும் கோறனமேந்தில (கவர்மென்ட்டில) மேய்க்க வேணும் என்பது ஊரின் சொல்வழக்கு.

இருந்தாலும் பிறகு நடந்த சில குடும்பச சச்சரவுகளால் இரண்டு அக்கா, இரண்டு அண்ணா, அப்பு ஆச்சி, நான், தம்பி என குடும்பம் குறுகிவிட்டது. இப்படி இருந்துவரும்போது அப்புவுக்கு வயிற்றில் கட்டி ஒன்று வளர்ந்து அவர் மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் தவறிவிட்டார். அதன்பின், குடும்பத்தின் வருமானத்துக்காக, ஆச்சி (என் அம்மா) காய்கறிகள் விளைவித்து விற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பகுதிநேரமாக உதவியபடி நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.

வடமராட்சியில் நெல் போன்ற தானியங்களை பெரிய அளவில் விளைவிப்பதில்லை. மாறாக, ஆச்சி, காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை விளைவித்தும், மாடு, ஆடு, கோழி வளர்த்தும், சிறிய அளவில் தோட்டம் செய்தும் அவற்றை சேனா சந்தையில் (இப்பொழுது நெல்லியடி மார்க்கெட்) விற்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவர். அந்தக்காலத்தில் சந்தை பின்னேரம் நான்கு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும். சந்தையில் கடைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு வியாபாரியும் நிலத்தில் சாக்கு விரித்து, குப்பி விளக்கு வெளிச்சத்தில் பொருட்களை பரப்பி வைத்திருப்பர். அந்த நேரத்தில் தான், மீன்களும் பிடிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்து வரப்படும்

அந்தக்காலத்தில், காலை எழுந்ததும் மாடுகளில் பால் கறந்து தேநீர்க் கடைகளுக்கு விநியோகித்த பின்னர்தான் பள்ளிக்கூடம் செல்ல முடியும். பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே மாடுகளுக்கு தீவனமான பனையோலைகளை எடுத்துவரவேண்டும். அதற்கென்று போய், காத்திருந்து எடுத்து வருவதற்குள் இரவு ஏழு மணியாகிவிடும். அந்த நேரத்தில்தான், பனையோலை தலையிலும், பாடங்கள் எழுதப்பட்ட கடதாசி கையிலுமாக   பள்ளிப் பாடத்தை மனனம் செய்துகொண்டே நடந்து வருவோம். இப்படியே தமிழ் வழியில் SSC (இன்றைய இலங்கையில் GCE O/L அல்லது இந்தியாவில் 10thக்கு சமமானது)  வரையில் படித்துவிட்டேன். இருந்தும் ஆங்கிலவழியில் படிக்க வேண்டும் என்பது என் கனவாகவே இருந்தது.

அப்பொழுது ஆங்கில பாடசாலையில் பணம் கட்டித்தான் படிக்க முடியும். எமது பெற்றோரின் எட்டுப்பிள்ளைகளுக்கும் பணம் செலுத்தி ஆங்கிலக்கல்வி தருவதற்கு எங்கள் குடும்பத்திடம் பணவசதி இருக்கவில்லை. ஆனால் அந்தக்காலத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஆங்கிலக்கல்வி படிக்கும் முதல் பிள்ளைக்கு முழுத்தொகையும், இரண்டாவதாக படிக்கும் பிள்ளைக்கு அரைத்தொகையும் செலுத்தினால் மூன்றாவது பிள்ளை இலவசமாக கற்கக்கூடிய சலுகை காணப்பட்டது. இதன் காரணமாகவும், ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டும் என்ற எனது அவா இருந்ததாலும் நான் ஆங்கிலப்பள்ளியில் (Vathiri Sacred Heart College - வதிரி திரு இருதயக் கல்லூரி)  சேர்க்கப்பட்டேன்.

அந்தக் காலத்தில் தமிழ்வழி வகுப்புக்களில் ஆங்கிலப் பாடமானது  சிரத்தையாக சொல்லித் தரப்படுவதில்லை. ஆசிரியர்கள் ஏனோதானோவென்றுதான் படிப்பிப்பார்கள். நாமும் அவ்வாறுதான் படித்துக்கொண்டிருந்தோம்.

எனக்கு ஆங்கிலம் எதுவுமே புரியாத காரணத்தால், எனக்கு ஆறாம் ஆண்டிலிருந்து படிக்க விருப்பமில்லை. எனவே பாடசாலைக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் அடம்பிடித்து அழுதேன். ஆச்சி மிகவும் கவலைப்பட்டு எனது மூன்றாவது அண்ணரிடம் (அவர் அப்போது ஆங்கிலவழி SSC படித்துக்கொண்டிருந்தார்) என் நிலைப்பாட்டைச் சொல்லி, குருவானவரிடம் பேசச்சொன்னார். அண்ணனும் குருவானவரிடம் போய் இவனை கீழ்வகுப்பில் சேர்த்தால் அவன் வேகமாகப் படித்து மற்றவர்களைவிட முன்னுக்கு வருவான்என்று உறுதியளித்தார். என்னைக் கவனித்த தலைமையாசிரியர் (Rev. Brother பாக்கியநாதர்), தனக்கு கீழிருந்த குருவானவரிடம் இவனை மூன்று மாதங்களுக்கு முதல் வகுப்பில் விடுவோம். பிறகு இவனது முன்னேற்றத்தைக் கவனித்து மேல்வகுப்புக்களில் சேர்க்கலாம் என்று சொல்லி என்னை முதலாம் தரத்தில் (Grade 1, இந்திய UKGக்கு சமமானது) சேர்த்தார். அப்போது எனக்கு வயது 18!

முதல் தவணையின் இறுதியில், நான் இரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வருடமுடிவில் வகுப்பேற்றும் போது என்னை 6ம் வகுப்பு C பிரிவில் சேர்த்தனர். அந்த வருடம்தான் எனது தம்பியும் ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்பு A பிரிவிற்கு வகுப்பேற்றப்பட்டார். வருடமுடிவில் இருவரும் சித்தியடைந்து அடுத்த வருடம் ஏழாம் வகுப்பு A க்கு வகுப்பேற்றப்பட்டோம். அந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமும் நாங்கள் வகுப்பேற்றப்பட்டு சிரேஷ்ட தராதர வகுப்பில் (SSC) இரண்டு வருட படிப்பை முடித்து பரீட்சைக்குத் தோற்றினோம். எங்களுடன் சேர்த்து 55 பொடியங்கள் அந்தப் பரீட்சைக்குத் தோற்றினோம். அவர்களில் ஆக ஆறு மாணவர்கள் தான் பூரண சித்தி எய்தினர். அந்த ஆறு பேரில் நானும் எனது தம்பியும் அடங்குவோம்


---------
தொடரும்


Popular Posts