Wednesday 17 September 2014

வடமராட்சியில் ஒரு வைரவர் கோயில்



எனது முதல் பதிவை எங்களது குலக் கோயிலைப் பற்றி எழுதுவதன் மூலம் மங்களகரமாக ஆரம்பிக்கின்றேன்.


இந்தியாவின் தென்கோடியில் வங்கக்கடலாலும் இந்து சமுத்திரத்தாலும் சூழப்பட்ட தீவு ஈழமாகும். இதை இலங்கைத் தீவு என்றும் அழைப்பார்கள். இத்தீவின் வடக்கே தலையாக யாழ்ப்பாணப் பட்டினம் அமைந்திருக்கின்றது. இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள வேதாரண்யம் எனும் பகுதியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்திலுள்ள வடமராட்சி என்ற பகுதியில் குடியேறியவர்களின் பரம்பரையில் வந்தவர்தான் இராமர் ஆறுமுகம் என்பவர். அவர் கமத்தொழிலையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார். அவ்வூரில் அக்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) தெய்வ வழிபாடு செய்வதற்கென தனது காணிக்குள் ஒரு கல்லை நட்டு ஆராதனை செய்து வணங்கி வந்தார். சில வருடங்களின் பின் அக் கல் நட்ட இடத்தில் ஒரு ஆயில் மரக்கன்று ஒன்று மரமாக வளர்ந்தது. இதை அறிந்த அக்கிராமத்தவர்கள் அம்மரத்தையும் இணைத்து பயபக்தியுடன் வணங்கி விசேஷ காலங்களில் பொங்கல் பூசை வழிபாடுகள் செய்து வந்தனர்.

இவ்வாறு சில வருடங்கள் கழிந்தன. வெய்யில் கொளுத்தும் பங்குனி மாதத்தில் ஒருநாள் ஆறுமுகத்தார் வெக்கை தாங்க முடியாமல், அந்த ஆயில் மர நிழலில் படுத்து சிறிது நேரம் நித்திரை செய்தார். அச்சமயம் அவரது கனவில் ஒரு வயது முதிர்ந்த பெண் கையில் ஒரு திரிசூலத்துடன் தோன்றி அச்சூலத்தை ஆறுமுகத்தாரிடம் கொடுத்து அதை வைத்து ஆராதிக்கச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். இக்கனவை கேள்விப்பட்ட அவரது வீட்டார் “கனவில் வந்து அருள் செய்தது தில்லைக் காளியம்மனேதான். எனவே தில்லையம்மனுக்கு ஒரு கொட்டில் அமைத்து வழிபடவேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆறுமுகத்தார் கொட்டில் அமைப்பதற்கு குழிதொண்டும்போது அங்கு ஒரு திரிசூலம் சுயம்புவாக வெளிப்பட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் இது தெய்வ செயல்தான் என நம்பி அவ்விடத்தில் பனைமரங்களினாலும் பனை ஒலையாலும் ஒரு கொட்டில் அமைத்து, அந்தத் திரிசூலத்தை அக்கொட்டிலில் நட்டு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ஆராதித்து வந்தனர்.

இப்படிவரும் காலத்தில் ஒருநாள் அடைமழையும் புயல் காற்றும் அடித்ததால் கொட்டில் விழுந்துவிட்டது. இதைக்கண்ட ஊரவர்கள் கிராமத்திற்கு ஒரு கோயில் வேண்டுமென சொல்லி ஆறுமுகத்தார் தலைமையில் ஒரு கோயில் கட்டி அதில் அந்தத் திருசூலத்தை வைத்து ஆராதிக்க முடிவு செய்தனர். விளைவாக, சுண்ணாம்பாலும் கல்லாலும் ஒரு கோவில் 1930 களில் அவ்விடத்தில் கட்டப்பட்டு, திரிசூலம் அங்கே வைக்கப்பட்டது. இக்கோவிலில் விசேஷ நாட்களில் ஆகம முறைப்படி பூசை செய்வதற்காகவும் கிராமத்தில் நடைபெறும் திவசம் (சிரார்த்தம்) மற்றும் நற்கருமங்களை செய்யவும் ஒரு பிராமணக் குருக்கள் தேவைப்பட்டார். இந்தியாவின் வேதாரண்யத்தில் வசித்து வரும் ஆறுமுகத்தாரின் சொந்தக்காரர்கள், இதற்காக, அங்குள்ள ஒரு பிராமண குடும்பத்தை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தார் வடமராட்சியில் அக்குடும்பத்துக்கு ஓர் உறைவிடம் அமைத்துக் கொடுக்க, மேற்படி கோயிலில் நிரந்தரமாகத் தங்கிய பிராமணக் குருக்கள் பூசை புனஸ்காரங்கள் முதலிய கருமங்களை செய்து வந்தார்.

இவ்வாறாக சில வருடங்களின் பின் ஆறுமுகத்தார் இறைபதம் எய்தினார். அதன்பின் அவரது மக்கள் மூவரும் பெண்கள் என்றபடியால் ஊர் மக்களைக் கூட்டி “ஊருக்கொரு ஒழுங்கான கோவில் இல்லை. எனவே இக்கோவிலை ஊர் மக்கள் தான் பராமரிக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது மலாயாவில் சண்முகம் சின்னாச்சி என்பவர் சகல வசதிகளுடனும் (இவருக்குச் சொந்தமாக வெள்ளி, துத்தநாக சுரங்கங்கள்கூட இருந்தன)  வாழ்ந்து வந்தார். அவர் கோயில் பொறுப்பை தனது தம்பியிடம் ஒப்படைத்தார்.

அவர் சுண்ணாம்புக் கலவையால் முறையான கோயில் கட்டிடமும் சுற்று மதிலும் கட்டி பொழிகல்லால் கிணறும் கட்டுவித்து காண்டாமணியும் கோபுரமும் அமைத்து, பூசைகளை கிரமமாக நடத்த வழிசெய்தார். இக்காலத்திலே கோயிலில் மூலவராக இருந்த திரிசூலத்தை எடுத்துவிட்டு கருங்கல்லினால் ஆன வைரவரை மூலவராக அமைத்தன் மூலம் இந்த தில்லையம்மன் கோயில் ‘சக்கலாவத்தை வைரவர் கோயிலாகமாற்றமடைந்து புதுப்பொலிவு பெற்றது. வைரவருக்கு கோயில் அமைத்தவுடன் பிள்ளையாருக்கும் ஒரு கோயில் அமைக்கவேண்டி இருந்தது. இதனை இக்கிராமத்தில் வசித்த பிள்ளைமார் குடும்பம் பொறுப்பேற்று, ஒரு கோயில் அமைத்து அதில் பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்தனர்.

தற்பொழுது அயற்கிராமங்களில் எல்லாம் கோயில்கள் எழுந்த போதிலும் சக்காலாவத்தை வைரவர் கோயிலே பழமையும் முதன்மையும் பெறுகின்றது. இன்று கோயில் நிர்வாகம் ஒரு நிர்வாக சபை மூலம் நடத்தப்பட்டாலும் கோவில் மாதாந்தப் பூசைகளை (12 மாதம்) ஆறுமுகத்தாரின் வாரிசுகளும் பிள்ளைமார் குடும்ப அங்கத்தவர்களும் நடத்தி வருகின்றனர். மேலும் ஆவணி மாதத்தில் வரும் பூர்வபட்ச பஞ்சமி திதியில் இருந்து பத்து நாட்களுக்கு அலங்காரத் திருவிழாவும் பத்தாம் நாள் அன்னதானமும் சீராக நடைபெற்று வருகின்றது.

இன்று ஒழுங்கைக்கொரு கோயில்கள் இக்கிராமத்தில் வெளிநாட்டும் பணத்தால் புதுப்பொலிவு பெற்று விளங்கினாலும் இக்கிராமத்தவர்கள் இந்த வைரவர் கோயிலை இன்றும் பயபக்தியுடன் ஆராத்தித்து வருகிறார்கள். வைரவரும் அவர்களுக்கு நல்வாழ்க்கை அளித்து வருகின்றார்.  

யாழ் வரைபடத்தில் கோயில்:

8 comments:

  1. Welcome to blog.
    We are so glad to see you here ..
    Pls write more.. Good job Seyon Nalla perandi..

    ReplyDelete
    Replies
    1. I heard Ruby Chitta cried when reading this... :-) y?

      Delete
  2. பெரியப்பாவின் எழுத்தைப்படிக்க மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது.மிகப்பெறுமதியான எழுத்து.
    சக்கலாவத்தை வரலாறு இதுவரை அறியாதது. நன்றியும் வாழ்த்துக்களும்.அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. அப்பாச்சியின் நினைவு மலரில் “சண்டிலிப்பாய் செகராசசேகர முதலியார் வழித்தோன்றலான ஆறுமுகம்” என்று குறிப்பிட்டிருந்ததாக ஞாபகம்.ஆறுமுகம் குடும்பத்தினர் சண்டிலிப்பாயிலிருந்து வந்திருப்பார்கள் என்று முன்பு நினைத்துக்கொண்டிருந்தேன்.இந்தப்பதிவு Geneology ஐயும் தொட்டுச்செல்கிறது.ஒவ்வொரு குடும்பச்சரித்திரமும் சேர்ந்ததுதானே எங்கள் வரலாறு.மிகப்பெறுமதியான பதிவு
    நன்றி

    ReplyDelete
  4. எங்கள் தலைமுறைக்கு அதுகூட தெரிய வாய்ப்பில்லையே மாமா. கடந்தகாலத்தின் மனிதர்கள், அதுவும் தாத்தா, சின்ன தாத்தா போன்ற அனுபவங்கள் நிறைந்த மனிதர்களைப் படிப்பது ஒரு கல்வெட்டைப் படிப்பதைப் போன்றது. ஒவ்வொரு வயதான மனிதர்களும் ஒவ்வொரு அரிய புத்தகங்களாக இருக்கிறார்கள்.

    இரண்டாம் உலகப் போர் எனும்போது, போர் வியூகங்கள், யூதப் படுகொலைகள், அணுகுண்டு போன்ற சில விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், உலகமே இரத்தத்தில் குளித்த அந்த நேரத்தில், வடமராட்சியின் சிறு கிராமத்தில் வாழ்ந்த பொதுமக்களின் வாழ்க்கையை இரண்டாம் உலகப் போர் எப்படி பாதித்திருக்கும்என அறிவது இன்னொரு வகையான சுவாரஸ்யம்.

    தாத்தாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே தனது nostalgic நினைவுகளுக்குள் மூழ்கி பழைய கதைகளை சொல்ல ஆரம்பிப்பார். குடும்ப வரலாறு, அந்தக்கால சமூகம், வாழ்க்கை முறை போன்ற எல்லாமே, அவரது பேச்சில் வெளிவந்து கொண்டிருக்கும். இவ்வளவு அறிவும் அனுபவமும் தாத்தாவின் காலத்துக்குப் பின் மறைந்துவிடப்போகிறதே என நினைத்திருக்கிறேன்.

    நான் யாழ்ப்பாணத்துக்கு அடிக்கடி போவதில்லை என்பதால், தாத்தாவுடன் மணிக்கணக்கில் பேசி, இந்த அனுபவங்களையெல்லாம் சேகரிப்பதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இப்போது அம்மாவும் சித்தாவும் தந்த யோசனையால் இந்த வலைப்பூவின் மூலம் எங்களுக்கு அடுத்துவரும் தலைமுறைகளுக்கும் இந்த அறிவும் அனுபவங்களும் அழியாமல், பிறழாமல் தாத்தாவின் எழுத்துக்களிலேயே கடத்தப்படப் போகின்றன. மிகவும் பெருமையாக இருக்கிறது. அவரது காலத்துக்குள் அவரிடமிருந்து முடிந்தளவு கதைகளை கறந்துவிடவேண்டுமென முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம்..

    ReplyDelete
  5. எனக்குத்தாத்தா இருக்கவில்லை.
    அந்தத்தலைமுறையினர் கடும் உழைப்பாளிகள்.உடலாலும் மனதாலும் உரமானவர்கள்.உண்மையான விவசாயிகள். நிலத்தின் பெறுமதியை உணர்ந்தவர்கள்.
    வதிரி மண் வளமானது. ஆழத்தோண்டினால்தான் ஊற்று.நீளமான துலாக்கள்.தோட்டத்துக்கு தண்ணீர் இறைக்கவும் வேண்டும் ,படிக்கவும் வேண்டும்.இரண்டையும் அவர்கள் சரியாகச்செய்ததனால்தான் இன்றைக்கு நாங்கள் இப்படிப்பேசிக்கொள்ள முடிகிறது.
    துலாமிதிப்பதைப்பற்றி கேட்டெழுதவும்.நீண்ட துலாஆழமான கிணறு. இருவர் மிதிக்க ஒருவர்பின்னே இழுக்க ஒருவர் கோலுவார்.
    ஒருமுறை யாரோ கையை விட்டுவிட்டார்களாம். மேலே துலாவில் நின்றவர்கள் தூக்கிவீசப்பட்டார்களாம்.

    ReplyDelete
  6. துலாவில் வீசப்பட்டது அவரது அப்பாவாம். அவரும் ஒருமுறை வீசப்பட்டிருக்கிறாராம்.

    தாத்தா பின்னூட்டங்களையும் படித்து வருகிறார். மனிதர் படுகுஷியாக துலாவைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறாராம். அடுத்த பதிவு, விரைவில் எதிர்பாருங்கள்....

    ReplyDelete
  7. அருமை.

    பதிவோடையை இணைத்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete

Popular Posts